×

2 கோடி தொண்டர்கள் விருப்பப்படியே விலகினோம் பாஜ கூட்டணி முறிவு எனது முடிவு அல்ல: ஒரு வாரத்துக்கு பின் வாய் திறந்தார் எடப்பாடி

சேலம்: பாஜ கூட்டணி முறிவு பொதுச்செயலாளரின் முடிவு அல்ல, தொண்டர்களின் விருப்பப்படியே தேஜ கூட்டணியில் இருந்து விலகினோம் என சேலத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவின் சூரமங்கலம் பகுதி 1, 2ன் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் ஒன்று கூடி, தொண்டர்களின் விருப்பத்தின் படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. பாஜ கூட்டணியின் முறிவு, அதிமுக பொதுச்செயலாளர் என்ற எனது முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பின் பதில் தான், பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடுத்த தீர்மானம். அனைவரது சம்மதத்துடன் ஒரு கட்சி எடுத்த முடிவை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என கூறுபவர்களுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்து விட்டா தேர்தலை சந்திக்கிறார்கள்?. அதுபோலவே தமிழ்நாட்டில் அதிமுக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். அவர்களின் நன்மைக்காக பாடுபடுவதோடு, நன்மை பயக்கும் திட்டங்களை ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதனை பின்பற்றுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஜெயலலிதா, அண்ணா மற்றும் அதிமுக தலைவர்களை அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வந்ததால், கடந்த மாதம் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து பேச இரு கட்சி தலைவர்களுக்கும் தலைமை தடை விதித்திருந்தது. இதனால் அண்ணாமலை, எடப்பாடி என யாரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பின், ‘பாஜவுடனான கூட்டணி முறிவு, தொண்டர்கள் முடிவு’ என்று எடப்பாடி கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சிறுபான்மை மக்கள் நினைத்தபடி நடந்துள்ளோம்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், ‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நாம் பல தேர்தல்களை சந்தித்திருப்போம். ஆனால் இந்த தேர்தல் மிகவும் சவாலான தேர்தல். சிறுபான்மையின மக்கள் நினைத்த படியே, இப்போது நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல, அதிமுக முதல் ஆளாக இருந்து பாதுகாக்கும். இதனை அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடமும் எடுத்துச்சொல்ல வேண்டும்’ என்றார்.

The post 2 கோடி தொண்டர்கள் விருப்பப்படியே விலகினோம் பாஜ கூட்டணி முறிவு எனது முடிவு அல்ல: ஒரு வாரத்துக்கு பின் வாய் திறந்தார் எடப்பாடி appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Edappadi ,Salem ,general secretary ,Teja alliance ,
× RELATED சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி